நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தேனுக்கு ஆசைப்பட்டு மின் கம்பத்தில் ஏறிய கரடி, மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நான்சச் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரது வீட்டருகே உள்ள மின் கம்பத்தில் தேன் கூடு கட்டியுள்ளது.
இந்நிலையில் அந்த தேன் கூட்டைப் பார்த்த கரடி ஒன்று, தேனை ருசிப்பதற்காக ஆசைப்பட்டு மின்கம்பத்தில் நேற்று ஏறியது. அப்போது மின்சாரம் பாய்ந்த நிலையில், தூக்கி வீசப்பட்ட கரடி தேயிலைத்தோட்டத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். இதில் மின்சாரம் பாய்ந்து பலியானது 5 வயது ஆண் கரடி என்பது தெரியவந்தது. முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ், கரடியின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். அதன்பின்னர் அந்த கரடியை அங்கேயே எரியூட்டினார்கள்.