சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், வழக்கத்தை விட அதிகளவிலான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். இந்நிலையில், தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் ஒருவர், மூச்சுத்திணறி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் பல பகுதிகளில் இருந்தும் வருகை தருகிறார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்லும் நிலையில் நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
இந்நிலையில் காரைக்குடியில் வசித்து வரும் ஓம்குமார் என்ற ஜவுளி வியாபாரி தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு வருகை தந்துள்ளார். அவர் கோவிலில் உள்ள ரூ 100 கட்டண வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய காத்திருந்துள்ளார். அந்த சமயத்தில் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த 108 ஆம்புலன்சில் அவரை ஏற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த ஓம்குமாருக்கு ஏற்கனவே இழப்பு நோய் இருந்து வந்துள்ளது. அதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். உயிரிழந்த ஓம்குமாரின் உடன் வந்த குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழும் காட்சிகள் அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்திருந்தது.