‘பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்’னு ஒரு பாடல் வரும். அதே போலத்தான் மனிதர்களும். பறவைகளின் வாழ்க்கைப் பாடத்தைப் படித்தால் நம்முடைய வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.
பறவைகளைப் பொருத்தவரை தன் குஞ்சுகளுக்கு இறகு முளைக்கும் வரை மட்டுமே கூட இருந்து கவனிக்கிறது. இறகு முளைத்து விட்டால் அதற்கும் தன்னம்பிக்கை வந்து விடுகிறது. நாமும் அலைந்து திரிந்து உணவு தேடலாம் என்று. அந்த தன்னம்பிக்கையை நாமும் வளர்த்துக் கொள்ள வேண்டும். எப்போதும் பெற்றோருக்கு தொல்லை கொடுக்கக்கூடாது.
பறவைகள் நிறத்தால் வேறுபட்டாலும் அவை அதனதன் தனித்திறனைக் காட்டத் தவறுவதில்லை. அந்தவகையில் நாமும் நமக்குள் நிற பேதம், சாதி, மதம், இனம் என வேறுபாடு பார்க்காமல் நமக்குள் இருக்கும் தனித்திறனை வெளிக் கொண்டு வந்து வாழ்வில் முன்னேற வேண்டும்.
பறவைகள் காலநிலைக்கு ஏற்ப தன் இடத்தை வாழும் வகையில் மாற்றிக் கொள்ளும். வெப்பமான நேரங்களில் குளிர்பிரதேசத்தைத் தேடிச் செல்லும். அதைப் போல நமது வாழ்வாதாரத்தைத் தேடி நாமும் எங்கு போய் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்.
பறவைகளில் ஒன்று இறந்து போனால் கூட மற்றவற்றை அழைக்கும். அது தான் ஒற்றுமை. அதே போல சாப்பாடு கிடைத்தால் கூட எல்லாவற்றையும் அழைக்கும். இந்த ஒற்றுமையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
பறக்கும்போதும், இரை தேடும்போதும் ஒற்றுமையாகச் செல்லும். புது நண்பர்களை இனம் காணும். தனது நட்பை வலுப்படுத்தும். இதை நாமும் உணர வேண்டும்.
பறவைகள் கண்ணும் கருத்துமாக இருந்து தன் குஞ்சுகளைக் கவனிக்கும். இதே போல நாமும் கண்ணும் கருத்துமாக இருந்து தன் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.
பறவைகள் எப்போதும் சுதந்திரமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். அதை நாமும் நம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். நமக்கு எந்த சூழலாக இருந்தாலும் நமது மனதை தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும்.