கண்டனம்!!! கையாலாகாத திமுக அரசு!!! டாஸ்மாக் ஊழலை எதிர்த்து போராடிய பாஜக தலைவர்கள் கைது...!- டிடிவி தினகரன்
Seithipunal Tamil March 18, 2025 12:48 AM

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்,'தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற அக்கட்சியின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது' என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தற்போது அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,"டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்றிருக்கும் ரூ.1000 கோடி ஊழலை கண்டித்து சென்னையில் போராட முயன்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட அக்கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மதுபான விற்பனை மற்றும் விநியோகத்தில் நடைபெற்றிருக்கும் ரூ.1000 கோடி  ஊழல் குறித்து இதுவரை வாய் திறக்காத நிலையில், அத்தகையை பெரும் ஊழலுக்கு எதிராக போராட முயன்ற பா.ஜ.க.வின் தலைவர்களை கைது செய்வதும், வீட்டுச் சிறையில் அடைத்து வைப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளையும், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களையும் கண்டும் காணாமல் கடந்து செல்லும் காவல்துறை, அரசு நிர்வாகத்தில் நடைபெற்ற ஊழலுக்கு எதிராக போராடும் தலைவர்களை கைது செய்திருப்பது தி.மு.க. அரசின் கையாலாகாத்தனத்தையே வெளிப்படுத்துகிறது.

எனவே, சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து போராட முயன்று கைது செய்யப்பட்டுள்ள பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்பட அக்கட்சியினர் அனைவரையும் உடனடியாக விடுவிப்பதோடு, இதுபோன்ற அடக்குமுறைகளையும் கைவிட வேண்டும் என தமிழக அரசையும் காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்"எனத் தெரிவித்திருந்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.