தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மது உற்பத்தி செய்யும் ஆலை சார்ந்த அலுவலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ.1000 கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த முறைகேடுக்கு திமுக அரசு துணைபோகி உள்ளதாக பாஜக குற்றம் சாட்டியது. அதோடு எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது. இன்று பாஜகவினர் போராட்டத்தில் கலந்து கொள்வதை தடுக்கும் வகையில், காலை முதலே பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் கூறியதாவது, டாஸ்மாக் மோசடி விவகாரத்தில் நாடகமாடுவதை விடுத்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ 1000 கோடி முறைகேடு என்ற ED, துரிதமாக மேல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மத்திய அரசு வேடிக்கை பார்க்கும் போது பாஜகவினர் தமிழக அரசு எதிராக போடுவது விந்தை என்று அவர் தெரிவித்துள்ளார். பாஜக-திமுக மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறது. இன்று நடைபெற்ற போராட்டம் கைது என்பது நாடகம். டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் உண்மையான விசாரணை வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.