#featured_image %name%
ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இதனைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில், இன்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை என்ற பெயரில் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் உட்பட பல பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக அரசுக்கு எதிராக கருத்து பதிவு செய்பவர்களை இந்த அரசு கைது செய்து சிறையில் அடைக்கிறது.
ஜனநாயக வழியிலான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என எதற்கும் அனுமதியில்லை. சமூக வலைத்தளங்களில் அரசின் குறைகளை சுட்டிக் காட்டுபவர்கள், எதிர் கருத்து தெரிவிப்பவர்கள், பதிவு போடுபவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து வருகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போதைப் பொருள்கள் புழக்கம் பள்ளி கல்லூரிகளில், குறிப்பாக மருத்துவ கல்லூரிகளில், சிறைகளில் என எல்லா இடங்களிலும் பரவியுள்ளதை பார்க்கிறோம். அதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுப்பவர்களை திட்டமிட்டு காட்டிக்கொடுத்து அவர்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்துகிறார்கள். நீதிமன்ற வாசலிலே கொலை செய்யும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு தரம் கெட்டு கிடக்கிறது. பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த அவலட்சண நிலையை கண்டித்து தனி மனிதரோ, அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ பொதுவெளியில் பேசினால் அவர்கள் மீது கடுமையான வழக்கு பதிவு செய்கிறது காவல்துறை.
ஜனநாயக ரீதியாக ஆட்சியினுடைய குறைகளை யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் காழ்ப்புணர்ச்சியோடு திமுகவை விமர்சிக்கும் அனைவரையும் கைது செய்வது என்பது ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் செயலாகும்.
டாஸ்மாக் மூலமாக ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் துணையுடன் இந்த ஊழல் அரங்கேறி உள்ளது.
இதைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திமுகவின் சர்வாதிகார செயலை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் – என்று காடேஸ்வரா சுப்பிர்மணியன் தமிழக அரசின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்துள்ளார்.
News First Appeared in