யானைகள் தங்களது விவசாய நிலங்களுக்குள் புகுவதைக் தடுக்கும் வகையில், விவசாயிகள் தேனீக்களை புதிய உதவியாளர்களாக பயன்படுத்தி வருகின்றனர்.
உலகம் முழுவதும் விரிவடைந்து வரும் விவசாய நிலங்கள் யானை வாழிடங்களை குறுக்கிடுவதால் யானை - மனித மோதல்கள் தவிர்க்க இயலாததாகி வருகிறது.
யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து சேதம் விளைவிப்பதும், ஆபத்தான மோதல் சம்பவங்கள் நிகழ்வதும் அதிகரித்து வருகின்றது.
கென்யாவில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, யானைகளை விரட்டுவதற்கான ஒரு எளிமையான புத்திசாலித்தனமான தீர்வை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தேன் கூடுகளை ஆங்காங்கே இணைத்துக் கட்டியுள்ள ஒரு வகையான வேலிகள் தான் அந்தத் தீர்வு.
யானைகள் தேனீக்களை வெறுக்கும் என்பதைப் பற்றி உள்ளூர் சமூகங்களின் நீண்ட கால அறிவை அடிப்படையாகக் கொண்டு, ஒலி எழுப்பக் கூடிய கூடிய இந்தத் தடைகள் உருவாக்கப்பட்டன.
இவை விவசாயிகளுக்கும் யானைகளுக்கும் இடையே மோதல் ஏற்படாமல் நிலைமையை திறமையாக கட்டுப்படுத்தும் ஒரு வழியை உருவாக்குகின்றன.
இப்போது இந்த முறை மொசாம்பிக்கில் இருந்து தாய்லாந்து வரை உலகம் முழுவதும் பரவி வருகின்றது.
யானைகள் தேனீக்களை இவ்வளவு வெறுப்பதற்கான காரணம் என்ன?
மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரிக்கும் இந்த நெரிசலான உலகில், தேனீக்கள் உண்மையில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று நம்பலாமா?
மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே ஏற்படும் மோதல்கள் , தற்போது உலகின் பல பகுதிகளில் அதிகரித்து வருகின்றன.
கென்யாவில் மக்கள் தொகையும் வளங்களுக்கான தேவையும் அதிகரித்து வருவதால், மனிதர்கள் குடியிருக்கும் பகுதிகள், யானைகள் நடமாடும் பகுதிகளை ஒட்டி விரிவடைந்து வருகின்றன.
அதே நேரத்தில், மனிதர்களுக்கும் பெரிய உயிரினங்களான யானைகளுக்கும் இடையேயான மோதல்களுக்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.
"விவசாய நிலங்கள் விரிவடைவதும், மரங்கள் வெட்டப்படுவதும், நகரமயமாக்கலும், யானைகள் போன்ற அதிக நிலப்பரப்பு தேவைப்படும் விலங்குகளின் வாழ்விடங்கள் சுருங்கிப் போவதும், யானைகளை உணவு மற்றும் தண்ணீருக்காக மனிதர்களின் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையத் தூண்டி வருகிறது," என்று எத்தியோப்பியாவைச் சேர்ந்த யானை பாதுகாப்பு மற்றும் மனித-யானை மோதல் குறித்த ஆலோசகரான கிரேட்டா பிரான்செஸ்கா ஐயோரி கூறுகிறார்.
"யானைகள் இருக்கும் இடங்களிலெல்லாம், மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே ஏற்படும் மோதல் சம்பவங்கள் குறித்த தகவல்களும் வருகின்றன."
பிரிட்டனின் வேல்ஸில் உள்ள பாங்கோர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வனவிலங்கு சூழலியல் நிபுணர் கிரேம் ஷானன், இருபது ஆண்டுகளாக ஆப்பிரிக்க யானைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
இந்தப் பிரச்னைக்குரிய பகுதிகளில் வாழ தள்ளப்படுகிற மக்கள் பெரும்பாலும் ஏழ்மையான சூழ்நிலையில் உள்ளவர்கள் தான்.
"அவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் விவசாயம் வாழ்க்கைக்கான முக்கியமான ஆதாரமாக இருக்கிறது." என்கிறார் கிரேம் ஷானன்.
ஆனால் நீரும், ஊட்டச்சத்து நிறைந்த பயிர்களும் யானைகளை வெகுவாக ஈர்க்கின்றன. இதனால் அவை மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் வர நேரிடுகிறது.
மக்கள் தங்கள் நிலங்களை பராமரிக்க பல மாதங்கள் உழைக்கிறார்கள்.
"பயிர்களை நட்டுவிட்டு, அவை காய்க்கத் தொடங்கும் தருணத்தில் யானைகள் வந்துவிடுகின்றன," என்று மனிதர்களுக்கும்-யானைகளுக்குமான மோதல் அதிகமாக இருக்கும் கென்யாவின் முவாகோமா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இம்மானுவேல் முவாம்பா தெரிவிக்கிறார்.
"யானைகள் வந்தால் எல்லாம் ஒன்றுமே இல்லாமல் போய்விடும்" என்கிறார்.
"எங்களில் சிலர் வாழ்வாதாரத்துக்காக இந்தப் பயிர்களை நம்பி இருக்கிறோம், அது ஒரே இரவில் அழிக்கப்படுவதை கற்பனை செய்து பாருங்கள்" என்றும் முவாம்பா கூறுகிறார்.
அது மட்டுமின்றி, இத்தகைய மோதல்கள் யானைகள் மற்றும் மனிதர்களின் உயிருக்கு ஆபத்தாக அமையலாம்.
பசியில் இருக்கும் 7 டன் எடையுள்ள யானைகள் பயிர்களுக்குள் நுழைவதைத் தடுக்க முயற்சிக்கும் விவசாயிகள் உயிரிழக்கும் நிலை ஏற்படலாம்.
அதே நேரத்தில், உணவுக்காக வந்த யானைகள் மனிதர்களால் கொல்லப்படும் அபாயமும் உள்ளது.
இந்த மோதல்களைத் தடுக்கும் முயற்சியாக, விஞ்ஞானிகளும் உள்ளூர் மக்களும் பல ஆண்டுகளாக பல்வேறு முறைகளைச் சோதித்து வருகின்றனர்.
மின்சார வேலிகள், கண்காணிப்பு கோபுரங்கள், சூரிய ஆற்றலில் விளங்கும் விளக்குகள், மிளகாய் பூசப்பட்ட செங்கற்கள், கடும் நாற்றமுள்ள யானை விரட்டிகள் மற்றும் யானைகளை பயமுறுத்த சத்தம் எழுப்புதல் போன்ற பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறைக்கும் அதன் தனிப்பட்ட நன்மைகளும், சில குறைகளும் உள்ளன.
ஆனால் யானைகளை விரட்டுவதற்குத் தேனீக்களை பயன்படுத்துவது, நம்பிக்கைக்குரிய மற்றும் திறமையான முறையாக உருவெடுத்துள்ளது.
இது யானைகளை வெற்றிகரமாகத் தடுப்பதுடன், விவசாயிகளுக்கு பல விதமான கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.
2000 களின் தொடக்கத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சூழலியல் நிபுணரும், 'சேவ் தி எலிஃபண்ட்ஸ்' என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவருமான ஃபிரிட்ஸ் வோல்ராத் மற்றும் அந்த அமைப்பின் நிறுவனர் இயன் டக்ளஸ்-ஹாமில்டன், கென்யாவைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்களிடமிருந்து ஒரு நாட்டுப்புறக் கதையை கேட்ட போது இந்த யோசனை பிறந்தது.
சில பகுதிகளில் மரங்கள் யானைகளால் சேதப்படுத்தப்படவில்லை, ஏனெனில் அவற்றில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன என்று சொல்லப்பட்ட அந்தக் கதை இருவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இந்தக் கதையால் ஈர்க்கப்பட்ட வோல்ராத் மற்றும் டக்ளஸ்-ஹாமில்டன், 'சேவ் தி எலிஃபண்ட்ஸ்' அமைப்பின் இணை இயக்குநர் லூசி கிங்குடன் இணைந்து, தேனீக்கள் உண்மையில் யானைகளை பயமுறுத்தக் கூடியவை தானா என்பதை அறிவியல் முறையில் ஆராயத் தொடங்கினர்.
2007-க்குள், அவர்கள் ஒரு முக்கியமான முடிவுக்கு வந்தார்கள். யானைகள் காட்டு ஆப்பிரிக்க தேனீக்கள் இருக்கும் மரங்களுக்கு அருகே செல்லாது என்றும், கூடவே "அந்த இடத்தை தவிர்க்கச் சொல்லி, ஒன்றுக்கொன்று எச்சரிக்கையையும் அனுப்புகின்றன" என்றும்,
" தேனீக்கள் கொட்டும் தன்மையுடையவை என்பதையும் யானைகள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளன. அதை அவை ஒருபோதும் மறக்காது " என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம் என்கிறார் லூசி கிங்.
பசியுடன் வரும் யானைகளின் தாக்குதலிலிருந்து விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க முடியும் வகையில் ஒரு புதிய முறையை லூசி கிங் உருவாக்கினார்.
அதாவது, தேன் கூடுகளை இணைத்துக் கட்டிய ஒரு வேலியை உருவாக்கினார்.
இந்த யோசனையை அவர் 2008ஆம் ஆண்டு கென்யாவின் லைக்கிபியா பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் முதன்முறையாக பரிசோதித்தார்.
அந்தப் பகுதி, யானைகள் அடிக்கடி பயிர்களை அழிப்பதால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது.
அந்த வேலி பண்ணையைச் சுற்றி அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு 10 மீட்டருக்கும் (33 அடி) ஒரு தேன் கூடு இரு தூண்களுக்கு இடையில் வைக்கப்படுகின்றது.
தேன் மெழுகு மற்றும் லெமன் கிராஸ் எண்ணெய் போன்ற இயற்கையான வாசனைகள் மூலம் ஈர்க்கப்பட்ட ஆப்பிரிக்க தேனீக்கள், இந்த கூடுகளில் இயற்கையாகவே குடியேறி வாழத் தொடங்குகின்றன.
"ஒரு ஏக்கர் (0.4 ஹெக்டேர்) பண்ணைக்கு 24 தேன் கூடுகள் தேவை," என்று கிங் விளக்குகிறார். ஆனால் அதில் பாதி கூடுகள் மட்டுமே உண்மையானவை.
மீதமுள்ள 12 கூடுகள் வெறும் போலிகள்.
இவை மஞ்சள் நிற பலகையால் செய்யப்பட்டவை.
இதனால் யானைகளுக்கு, அந்த இடத்தில் உண்மையில் அதிகமான தேன் கூடுகள் இருக்கின்றன என்ற உணர்வு ஏற்படுகிறது.
இது ஒரே நேரத்தில் செலவுகளை குறைப்பதுடன், உண்மையான தேனீக்களுக்கு கூடுதல் இடத்தையும் வழங்குகின்றன.
"யானைகள் இருட்டில் அவற்றை நெருங்கும் போது, தேனீக்களின் வாசனையும் தேனின் மணமும் உடனே அவற்றுக்குத் தெரியும். அதே சமயம் நிறைய மஞ்சள் பெட்டிகள் எங்கும் காணப்படும். எது உண்மையானது, எது போலியானது என்று யானைகளுக்கு புரியாது. அதனால் இது ஒரு மாயை போன்று தோன்றுகிறது. ஆனால் இந்த முறை நன்றாக வேலை செய்கிறது," என்கிறார் கிங்.
யானைகளைப் பயிர்களிலிருந்து தடுத்து உணவுப் பாதுகாப்பை வழங்குவதற்கு மட்டும் அல்லாமல், தேனீக்களுக்காக அமைக்கப்படும் இந்த வேலிகள் அவற்றைப் பயன்படுத்தும் சமூகங்களுக்கு பல்வேறு நன்மைகளையும் வழங்குகின்றன.
முதலில், தேன் உற்பத்தி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.
"ஒரு விவசாயியிடம் தேனும், பயிர்களும் இருந்தால், அது குடும்பத்தை நடத்த போதுமானதாக இருக்கும்," என்கிறார் முவாம்பா.
அவர் தற்போது 'சேவ் தி எலிஃபண்ட்ஸ்' அமைப்பில் 'தேன் கூடு வேலி' திட்டத்தின் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். முதன்முதலில் அவரது கிராமத்தில் தான் இந்த வேலிகள் பரிசோதிக்கப்பட்டன.
இப்போது அவர் மற்ற விவசாயிகளுக்கு இந்த வேலிகளை எப்படிப் பொருத்துவது மற்றும் பராமரிப்பது என்பதைக் கற்றுத் தருகிறார்.
"பெண்கள் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையேயான மோதலால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்" எனக் கூறுகிறார் கிங்.
பொதுவாக, விவசாய வேலைகளில் அதிகம் ஈடுபடுவது பெண்களே. அவர்கள் தான் யானைகளை விரட்டும் பொறுப்பையும் ஏற்க வேண்டியுள்ளது, இதனால் காயம் அடைவதற்கான அபாயமும் அவர்களுக்கு அதிகமாக உள்ளது.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது இந்த சூழ்நிலைகளை மிகவும் திறம்பட கையாள அவர்களை அனுமதிக்கிறது. அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது, வீட்டுப் பொறுப்புகள், கல்வியைத் தொடர்வது அல்லது மற்ற விஷயங்களைச் செய்ய நேரம் ஒதுக்குவது ஆகியவை அவர்களுக்கு சாத்தியமாகிறது," எனக் கூறுகிறார் கிங்.
பல ஆண்டுகளாக, கிங் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள், கென்யாவில் தேன் கூடுகளால் அமைக்கப்படும் வேலிகள் எந்தளவு பயனுள்ளதாக உள்ளன என்பதற்கான பல்வேறு ஆதாரங்களை சேகரித்துள்ளனர்.
இன்று, இந்த வேலிகள் தான்சானியா, மொசாம்பிக் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பரிசோதிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்படுகின்றன.
அதனைத் தொடர்ந்து, மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையேயான மோதல் நாள்தோறும் நிகழும் பிரச்னையாக இருக்கும் மற்றொரு நாடான தாய்லாந்திலும், இந்த முறையின் செயல்திறனை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
2024ஆம் ஆண்டு, கிங் மற்றும் அவரது குழுவினர் ஒரு நீண்டகால ஆய்வின் முடிவை வெளியிட்டனர். இதில், இம்மானுவேல் முவாம்பா வசிக்கும் முவாம்பிட்டி மற்றும் முவாகோமா எனும் தெற்கு கென்யாவின் இரண்டு சிறிய கிராமங்களில், ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக தேன் கூடுகளால் அமைக்கப்பட்ட வேலிகளின் செயல்திறன் ஆராயப்பட்டது.
இந்த சமூகங்கள் முட்டைக்கோஸ் மற்றும் மக்காச்சோளம் போன்ற பயிர்களின் உற்பத்தியைப் பெரிதும் சார்ந்துள்ளவை.
இவை சாவோ தேசிய பூங்காவின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு இடையே கடந்து செல்லும் பல யானைகளை ஈர்க்கின்றன.
கென்யாவில் உள்ள சாவோ தேசிய பூங்கா, அதிக அளவிலான யானைகளை, அதாவது சுமார் 15,000 யானைகளை கொண்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் உள்ளூர் மக்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றினர்.
அவர்கள் தேன் கூடுகளால் அமைக்கப்பட்ட வேலிகளை அமைத்து, அதற்கான தகவல்களைத் திரட்டினார்கள்.
ஆய்வில், கிட்டத்தட்ட 4,000 யானைகள் இந்த வேலிகளை அணுகியதில், அதில் 75 சதவீத யானைகள் வேலியை மையமாகக் கொண்டு விரட்டப்பட்டன என்று கண்டறியப்பட்டது.
மேலும், விவசாயிகள் தேன் விற்பனை மூலம் 2,250 டாலர் (சுமார் 1,740 யூரோ) வருமானம் ஈட்டினர்.
"இது மிகவும் புத்திசாலித்தனமான யோசனை என்று நான் நினைக்கிறேன்," என்றும், "இந்த இயற்கையான முறையைப் பயன்படுத்தி, இந்த விலங்குகள் பண்ணைகளை நெருங்காமல் தடுக்கும் திறன் கிடைத்திருக்கிறது. இது ஒரு அருமையான யோசனை," என்றும் நேரடியாக ஆராய்ச்சியில் ஈடுபடாத ஷானன் கூறுகிறார்.
இருப்பினும், இந்த ஆய்வு சில பலவீனங்களையும் வெளிப்படுத்தியது என்பதையும் ஷானன் குறிப்பிடுகிறார்.
உதாரணமாக, பூக்கும் தாவரங்கள் இல்லாததால் வறட்சியான ஆண்டுகளில் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.
2018ஆம் ஆண்டு, முந்தைய வருட வறட்சியிலிருந்து தேனீக்கள் மீண்டு வருவதில் சிரமம் ஏற்பட்ட போது, அதிகமான யானைகள் கிராமங்களில் நுழைந்தன.
அப்போது அந்த வேலிகள் சுமார் 73 சதவீத யானைகளை மட்டுமே தடுப்பதில் வெற்றி கண்டன. "எந்த ஒரு முறையை அல்லது கருவியைப் போலவே, இதற்கும் சில வரம்புகள் மற்றும் சவால்கள் இருக்கின்றன," என்கிறார் ஷானன்.
தேன் கூடுகளால் அமைக்கப்பட்ட வேலிகளில், காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்தும் தான் கவலைப்படுவதாக கிங் கூறுகிறார்.
"முன்பு 15 முதல் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் இந்த வறட்சி ஏற்பட்டு வந்தது. ஆனால் இப்போது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்படிப்பட்ட வறட்சிகள் ஏற்பட்டால், அது பெரிய சிக்கல் ஆகிவிடும். ஏனெனில் தேனீக்கள் சரியான நேரத்தில் மீண்டு வர முடியாது," என்கிறார் அவர்.
அதிகமான மழையும் தேனீக்களுக்கு மற்றொரு பிரச்னையாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்.
" மரங்களிலும் புதர்களிலும் இருக்கும் பூக்களை, மழை கீழே தள்ளிவிடும். இதனால் தேனீக்கள் தேன் சேர்க்க பூக்கள் கிடைக்காது," என விளக்குகிறார் கிங்.
தேன் கூடுகளால் அமைக்கப்பட்ட வேலிகளுடன் சேர்த்து பிற பாதுகாப்பு முறைகளையும் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, உலர்ந்த மிளகாய் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் அல்லது கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பது போன்றவற்றையும் பின்பற்ற வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
"ஒரே ஒரு முறையில் தீர்வு கிடையாது," என்கிறார் கிங்.
ஆனால் பரந்த அளவில் சிந்தித்தால், இப்படியான உள்ளூர் தீர்வுகள் மனிதர்களுக்கும் யானைகளுக்குமான மோதலை குறைக்க உதவினாலும், காலநிலை மாற்றம் மற்றும் நிலவியல் சிக்கல்கள் போன்றவற்றால் அவை ஆபத்தில் ஆழ்த்தப்படலாம் என்று ஐயோரி கூறுகிறார்.
இதன் விளைவாக, "மக்கள் இத்தகைய முயற்சிகளில் வைத்திருக்கும் நம்பிக்கையும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது" என்று அவர் தெரிவிக்கிறார்.
"எப்போதும் பலதரப்பட்ட அணுகுமுறையை நாம் பின்பற்ற வேண்டும். அதில் முக்கியமானவை, அரசாங்கத்துடன் எவ்வாறு இணைந்து செயல்படுவது? மக்களின் நம்பிக்கையை எவ்வாறு உருவாக்குவது? யானைகளும் மக்களும் எதிர்கொள்ளும் அழுத்தத்தை முறையாக எவ்வாறு குறைப்பது போன்றவை," என்று அவர் விளக்குகிறார்.
மேலும் "இவை பெரும்பாலும் மிகவும் சிக்கலான நடவடிக்கைகளாகவே அமையும்," என்றும் அவர் குறிப்பிடுகிறார் ஐயோரி .
தற்போது, தேன் கூடுகளால் அமைக்கப்படும் வேலிகள் முவாம்பா மற்றும் பிற சமூகங்களுக்கு உதவுகின்றன. "நாங்கள் இரண்டு தேன் கூடுகளால் அமைக்கப்பட்ட வேலிகளுடன் தொடங்கினோம். இப்போது மூன்று கிராமங்களை உள்ளடக்கிய 700 தேன் கூடுகள் உள்ளன," என்கிறார் முவாம்பா.
"இது இப்போது சமூகத்திற்கு ஒரு நல்ல விஷயமாக உள்ளது" என்று கூறும் முவாம்பா, இப்போதெல்லாம், யானைகளுடன் இணைந்து வாழ வேண்டும் என்று மக்கள் நம்புகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
தேன் கூடுகளால் அமைக்கப்படும் வேலிகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, "இங்குள்ள பெரும்பாலான விவசாய நிலங்களில் யானைகள் பயிர்களைத் தாக்கியிருந்தன" என்பதை கூறும் முவாம்பா", ஆனால், இப்போது, மக்கள் எளிதில் அச்சமின்றி வாழ முடிகிறது" என்பதையும் குறிப்பிடுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு