ஷாக்கான பதில் .... ChatGPT யின் பதிலை கண்டு பதறிய இளைஞர்!
Dinamaalai March 26, 2025 07:48 PM

வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில், பலர் தங்களது சந்தேகங்களுக்கு விடை காண செயற்கை நுண்ணறிவு  ChatGPTஐ  நம்பி வருகின்றனர். பெரும்பாலான நேரங்களில் அதன் பதில்கள் பயனுள்ளதாகவும், நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்தக்கூடியதாகவும் இருக்கும். ஆனால் சில சமயங்களில், எதிர்பாராத பதில்கள் பயங்கரமாகவும், குழப்பமாகவும் இருக்கக்கூடும்.

நார்வே நாட்டில் வசித்து வரும்  ஹியல்மார் ஹோல்மென் என்ற நபர், ChatGPT-யிடம் “நான் யார்?” என விளையாட்டாக கேட்டபோது, அவர் எதிர்பாராத ஒரு பதிலை பெற்றுள்ளார்.  ChatGPT, “நீங்கள் நார்வேவின் வாசி. 2020 டிசம்பரில் உங்கள் 7 மற்றும் 10 வயதான இரு மகன்களையும் Pond ஓரத்தில் கொன்றது மூலம் செய்தித்தாள்களில் பரபரப்பானவர்” என பதில் அளித்தது. இந்த பொய்யான தகவலைக் கேட்ட ஹோல்மென் அதிர்ச்சியடைந்து, உடனடியாக காவல் நிலையம் சென்று புகார் செய்துள்ளார்.  

இச்சம்பவம் குறித்து டெய்லி ஸ்டார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  ஹோல்மென், நார்வே தகவல் பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்து, ChatGPT தன்னைப்பற்றி தவறான மற்றும் அவதூறான தகவல்களை வெளியிட்டுள்ளது என கூறியுள்ளார். தனது பெயரும், குழந்தைகளின் எண்ணிக்கையும் சரியாக இருந்தாலும், கொலை செய்ததாக கூறுவது முழுமையாகக் கூற்றுப் பொய்யாகும் எனவும்  வலியுறுத்தியுள்ளார்.   இதுபோன்ற தவறான தகவல்கள் தனக்கு சமூகத்தில் பெரும் பழியினை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.  

இது குறித்து டிஜிட்டல் உரிமைகளை பாதுகாக்கும் ‘Noyb’ அமைப்பின் உதவியுடன், ஹோல்மென் OpenAI நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  அவதூறுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும்  கோரிக்கை விடுத்துள்ளார்.  இதற்கு பதில் அளித்த OpenAI நிறுவனம், ChatGPTயின் பதில்களின் துல்லியத்தை மேம்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.