மும்பை மீண்டும் தோல்வி: ரோஹித்திடம் ஹர்திக் நடந்து கொண்ட விதம் பற்றி ரசிகர்கள் கூறியது என்ன?
BBC Tamil March 30, 2025 02:48 PM
Getty Images

ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியின் 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது. 197 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 36 ரன்களில் தோல்வி அடைந்தது.

கடந்த 2023ம் ஆண்டிலிருந்து ஆமதாபாத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த 4 ஆட்டங்களிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் இருவர் மட்டும்தான். முதலாமவர் தமிழக வீரர் சாய் சுதர்சன் 41 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்ததும், பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருவரின் முத்தாய்ப்பான ஆட்டம் வெற்றிக்கு துணையாக இருந்தது. ஆட்டநாயகன் விருது பிரசித் கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டது.

இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, அந்த அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவிடம் நடந்துகொண்ட விதம் பற்றி அந்த அணி ரசிகர்கள் கூறியது என்ன?

Getty Images பவர்ப்ளேயை பயன்படுத்திய கில், சாய்

குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சிறப்பாகப் பயன்படுத்தி ரன்களைச் சேர்த்தனர். விக்கெட்டுகளை விடாமல் இருவரும் தலா 32 ரன்களைச் சேர்த்தனர். இருவரும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கி, 1,300 ரன்களுக்கு மேல் சேர்த்துவிட்டனர். பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி குஜராத் 66 ரன்களைச் சேர்த்தது. பீல்டிங் கட்டுப்பாடுகள் தளர்ந்தபின் 7-வது ஓவர் முதல் 10-வது ஓவர்கள் வரை மும்பை அணி பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்ததால் 13 ரன்கள் மட்டுமே குஜராத் சேர்த்தது.

சுப்மன் கில்லுக்கு ஏற்றார்போல் டீப் ஸ்குயர் லெக்கில் நமன்திரை நிறுத்தி ஹர்திக் பாண்டியா ஷார்ட் பந்து வீசினார். இதை கில் தூக்கி அடித்தபோது, நமன்திரிடம் கேட்சானது. ஹர்திக்கின் திட்டத்தால் சுப்மன் கில் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 78 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து வந்த ஜோஸ் பட்லர், அதிரடியாக பவுண்டரிகள், சிக்ஸரை விளாசி ரன்கள் சேர்த்தார். ஒருபக்கம் சுதர்சனும், மறுபுறம் பட்லரும் வேகமாக ரன்களைச் சேர்த்தனர். பட்லர் 39 ரன்கள் சேர்த்த நிலையில் முஜிபுர் ரஹ்மான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

Getty Images விக்கெட் சரிவு

அடுத்து வந்த ஷாருக்கான் ஒரு சிக்ஸர் அடித்து 9 ரன்னில் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சிறப்பாக பேட் செய்த சுதர்சன் 33 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அடுத்து களமிறங்கிய ரூதர்போர்ட் அதிரடியாக 2 சிக்ஸர்களை விளாசினார். 18-வது ஓவரிலிருந்து குஜராத்தின் கொலாப்ஸ் தொடங்கியது.

போல்ட் வீசிய 18-வது ஓவரின் கடைசிப்பந்தில் சுதர்சன் யார்கர் பந்துவீச்சில் காலில் வாங்கி 63 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து தீபக் சஹர் வீசிய 19-வது ஓவரில் ராகுல் திவேட்டியா ஒரு பந்துகூட சந்திக்காமல் ரன்அவுட் ஆகினார், 2வது பந்தில் ரூதர்போர்ட் 18 ரன்னில் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்தார். சத்யநாரயண ராஜீ வீசிய கடைசி ஓவரில் ரஷித்கான் ஒரு சிக்ஸர் அடித்தநிலையில் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்தார், கடைசிப் பந்தில் சாய் கிஷோர் ஒரு ரன்னில் ரன்அவுட் ஆகினார்.

179 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்தது குஜராத் அணி, இதனால் எளிதாக 200 ரன்களை எட்டிவிடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், கடைசி 17 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து குஜராத் அணி கொலாப்ஸ் ஆகியது. குஜராத் தரப்பில் ஹர்திக் 2 விக்கெட்டுகளையும், போல்ட், தீபக் சஹர், ராஜூ, ரஹ்மான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Getty Images ரோஹித் சர்மா ஏமாற்றம்

197 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. ரோஹித் சர்மா 2 பவுண்டரிகள் அடித்தநிலையில், சிராஜ் பந்துவீ்சில் சூட்சமத்தை அறியாமல் பேட் செய்தார். 2 பவுண்டரிகளை வழங்கிய சிராஜ் லென்த்தை சற்று இழுத்து இன்ஸ்விங் செய்தார், இதை கவனிக்காத ரோஹித் சர்மா வழக்கமான பந்து என நினைத்து ஆட முற்பட்டபோது க்ளீன் போல்டாகி வெளியேறினார். ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ரோஹித் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார். தொடர்ந்து 2வது ஆட்டத்திலும் ரோஹித் சர்மாவிடம் இருந்து பெரிய ஸ்கோர் வரவில்லை.

Getty Images பட்டைய கிளப்பிய ஸ்கை

அடுத்து வந்த திலக் வர்மா வந்த வேகத்தில் ரபாடா பந்துவீச்சில் 2 பவுண்டரிகள், சிக்ஸர் என பறக்கவிட்டார். மறுபுறம் ரிக்கெல்டன் தடுமாறினார். சிராஜ் பந்துவீச்சில் இன்சைட் எட்ஜில் ரெக்கில்டன் 6 ரன்னில் போல்டாகி வெளியேறினார். டாப் ஆர்டர் இருவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

அடுத்துவந்த சூர்யகுமார், திலக்வர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் களத்தில் இருக்கும் வரை ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் சேர்த்தது. சூர்யகுமார் அடிக்கத் தொடங்கியதும், திலக் வர்மா தனது வேகக்தைக் குறைத்துக்கொண்டார்.

சிராஜ் பந்துவீச்சில் சுப்லா ஷாட் அடித்து ஸ்கை சிக்ஸருக்கு பறக்கவிட்டார், இசாந்த் ஓவரிலும் இதேபோல சிக்ஸரை ஸ்கை விளாசினார். ஸ்கையின் அதிரடிக்கு சாய்கிஷோரும் தப்பவில்லை, கவர்திசையில் சிக்ஸர் உதை வாங்கினார். சூர்யகுமார், திலக் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 42 பந்துகளில் 62 ரன்களை எட்டியது. கடைசி 9 ஓவர்களில் மும்பை வெற்றிக்கு 100 ரன்கள் தேவைப்பட்டது.

Getty Images ஆட்டத்தை மாற்றிய பிரசித் கிருஷ்ணா

பிரசித் கிருஷ்ணா பந்துவீச அழைக்கப்பட்டபின் மும்பை அணியின் ஸ்கோர் சரியத் தொடங்கியது. அதிகமான ஸ்லோவர் பந்துகளை வீசி மும்பை பேட்டர்களை பிரசித் கிருஷ்ணா திணறவிட்டார். திலக் வர்மா 39 ரன்னில் பிரசித் கிருஷ்ணா ஸ்லோவர் பந்துக்கு இரையாகினார். அடுத்துவந்த புதுமுக வீரர் ராபின் மின்ஸ் 3 ரன்னில் சாய் கிஷோர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அரைசதம் நோக்கி நகர்ந்த ஸ்கை 48 ரன்களில் பிரசித் கிருஷ்ணாவின் 97 கிமீ ஸ்லோவர் பந்தில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 11 ரன்கள் சேர்த்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் அப்பட் ஷாட் அடிக்க முற்பட்டு சிராஜிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 97 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்று வலுவாக இருந்த மும்பை அணி, அடுத்த 27 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து குலைந்தது.

ஹர்திக் பாண்டியா கடந்த சீசனுக்கு முன்பு வரை இதே மைதானத்தில் குஜராத் அணிக்காக ஆடியிருந்தாலும், இந்த ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப தனது பேட்டிங்கை மாற்ற முடியவில்லை. கடைசி 3 ஓவர்களில் மும்பை அணி வெற்றிக்கு 73 ரன்கள் தேவைப்பட்டது. இது சாத்தியமில்லாத இலக்கு எனத் தெரிந்தது.

சான்ட்னர் 18 ரன்களிலும், நமன் திர் 18 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே சேர்த்தது. குஜராத் அணி தரப்பில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா, சாய் கிஷோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Getty Images சாதகமாக அமைக்கப்பட்ட ஆடுகளம்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆமதாபாத் ஆடுகளம் சாதகமாக அமைக்கப்பட்டதுதான் வெற்றிக்கு முக்கியக் காரணம். மும்பை அணி சிவப்பு மண் ஆடுகளத்தில் விளையாடிப் பழக்கப்பட்டது, இந்த ஆடுகளத்தில் பந்து பேட்டரை நோக்கி வேகமாக வரும், அடித்து ஆடுவது சுலபமாக இருக்கும்.

ஆனால், ஆமதாபாத்தில் நேற்றைய ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு போடப்பட்ட கருப்பு, களிமண் ஆடுகளம். இந்த ஆடுகளத்தில் பந்து மெதுவாகவும், சற்று நின்றும் வரும். புதிய பந்தில்தான் பெரிய ஷாட்களை அடிக்க முடியும், பந்து சற்று தேய்ந்துவிட்டால் பெரிய ஷாட்கள் அடிப்பது கடினம். இந்த ஆடுகளத்தில் 180 ரன்கள் சேர்த்தாலே சேஸிங் செய்வதற்கு எதிரணி சிரமப்பட வேண்டியதிருக்கும். இதில் 196 ரன்கள் இலக்கு என்பது சாத்தியமில்லாத இலக்காகும்.

Getty Images

ஆமதாபாத் மைதானத்தில் இதற்கு முன் 200 ரன்களுக்கு மேல்கூட ஸ்கோர் செய்யப்பட்ட ஆட்டங்கள் நடந்துள்ளன. அந்த ஆட்டங்கள் அனைத்தும் சிவப்பு மண் ஆடுகளத்தில் அடிக்கப்பட்டவை. ஆனால், நேற்றைய ஆட்டம் கருப்பு மண் ஆடுகளத்தில் விளையாடப்பட்டது.

சிவப்பு மண் ஆடுகளத்தில் ஒருவேளை நேற்று ஆட்டம் நடந்திருந்தால், புதிய பந்தில் டிரன்ட் போல்டின் ஸ்விங், லென்த் பந்தையும், தீபக் சஹரின் ஸ்விங் பந்துவீச்சையும் குஜராத் பேட்டர்கள் சமாளித்திருக்க மாட்டார்கள். ஆனால், இந்த அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்கும் வகையில் கருப்பு மண் ஆடுகளம் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆடுகளத்தில் போல்ட், தீபக் சஹர் பந்துவீசினாலும் எதிர்பார்த்த வேகம் கிடைக்கவில்லை, ஸ்விங் செய்வதும் கடினமாக இருந்தது.

ஆதலால் இந்த கருப்பு களிமண் ஆடுகளத்தை குஜராத் அணி கேட்டு வாங்கி ஆட்டத்தை நடத்தக் கோரியுள்ளது. தங்களுக்கு சாதகமான ஆடுகளத்தை நன்கு பயன்படுத்தி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. கருப்பு மண்ணில் விளையாடி அனுபவம் இல்லாத மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சிலும் சொதப்பி, பேட்டிங்கிலும் தோல்வி அடைந்தது.

"களிமண் ஆடுகளத்தை விரும்பினோம்" Getty Images

வெற்றிக்குப்பின் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில், "முதல் போட்டிக்கு முன்பாகவே இந்த கருப்பு களிமண் ஆடுகளத்தில் விளையாட விரும்பினோம். எதிரணி யார் என்பதைப் பொருத்தும் ஆடுகளம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதுபோன்ற ஆடுகளம் எங்களுக்கு சிவப்பு மண் ஆடுகளத்தைவிட பேட்டிங், பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும்.

கருப்பு மண் ஆடுகளத்தில் ஆடு ம்போது பவுண்டர்கள் அடிப்பது கடினமாக இருக்கும், பந்து தேயும் போது ஷாட்களை ஆடுவது இன்னும் கடினமாக இருக்கும்.

எங்களைப் பொருத்தவரை திட்டங்கள் அனைத்தையும் கலந்து பேசி செயல்படுத்துவோம், சில நேரங்களில் நினைத்ததுபோல் நடக்கும், சிலவை நடக்காது. ரஷித் கான் டி20 போட்டியி்ல் முதல் முறையாக 2 ஓவர்கள் மட்டுமே இந்த ஆட்டத்தில் வீசியுள்ளார் ஏன் எனக்குத் தெரியவில்லை. வழக்கமாக ரஷித்கானுக்கு கடைசி கட்டத்தில் ஓவர்களை வீச அழைப்பேன், ஆனால், வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசியதால், ஆட்டம் கையைவிட்டு செல்லக்கூடாது என்பதால் பந்துவீச்சை மாற்றவில்லை. பிரசித் கிருஷ்ணா அற்புதமாகப் பந்துவீசினார். அடுத்த ஆட்டம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணியுடன் இதே ஆடுகளத்தில்தான் விளையாடப் போகிறோம், சிறந்த சவாலாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

ரோஹித்தை புகழ்ந்த ரசிகர்கள்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த சீசனிலேயே கேப்டன் மாற்றப்பட்டுவிட்ட போதிலும், அந்த அணியின் சில ரசிகர்கள் அந்த மாற்றத்தை ஏற்க இன்னும் கூட தயாராக இல்லை என்பதை நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகான சில சமூக வலைதள பதிவுகள் உணர்த்துகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை இன்னும் கொண்டாடும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களில் ஒரு பிரிவினர், நேற்றைய தோல்விக்குப் பிறகு அவரைப் புகழ்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

குறிப்பாக, குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங்கில் சிறப்பாக ஆடி ரன்களை குவித்துக் கொண்டிருந்த போது ரோஹித் சர்மாவிடம் ஹர்திக் பாண்டியா அடிக்கடி ஆலோசனை கேட்டதை பார்க்க முடிந்தது. அந்த வீடியோக்களையும், ஸ்கிரீன்ஷாட்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரோஹித் சர்மாவை 'கேப்டன் ஃபார் எவர்' என்று சில மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். குஜராத் அணிக்கு எதிராக ஹர்திக் பாண்டியா அமைத்த பீல்டிங் வியூகங்களையும், பவுலர்களை மாற்றிய விதத்தையும் அவர்கள் குறை கூறி பதிவிட்டுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.