18-வது ஐபிஎல் போட்டி கடந்த 22ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதியது. இதில் மும்பை அணி டாஸ் வென்ற நிலையில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணியை வீழ்த்தி 36 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது குஜராத் அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர் சாய் கிஷோர் 14வது ஓவரை வீசினார். அப்போது மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சாய் கிஷோர் இடையே பிரச்சனை வந்தது. இருவரும் மைதானத்தில் வைத்து ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்ட நிலையில் உடனடியாக நடுவர் வந்து இருவரையும் விலக்கி விட்டார். அப்போது ஹர்திக் பாண்டியா சாய் கிஷோரை பார்த்து போ என்று கை காண்பித்தார். இந்த போட்டி முடிவடைந்த பிறகு சாய் கிஷோர் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் கட்டியணைத்து பிரச்சனையை முடித்துக் கொண்டனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.