8 ரன்களில் அவுட்.. ஆனால் வரலாற்று சாதனை படைத்த ரோகித் சர்மா..!
Tamil Minutes March 30, 2025 02:48 PM

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக மும்பை மோதிய நிலையில், மும்பையின் நட்சத்திர ஆட்டக்காரர் ரோகித் சர்மா வெறும் 8 ரன்களில் அவுட் ஆனார். இரண்டு பவுண்டரிகளை மட்டுமே அடித்த அவர், நான்காவது பந்தில் அவுட் ஆனார்.இதற்கு முன்பு சிஎஸ்கே அணியுடன் நடந்த போட்டியிலும் அவர் டக் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், நேற்று அவர் ஐபிஎல் தொடரில் ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அதாவது, டி20 தொடரில் 450 வது போட்டியை விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை நேற்று அவர் பெற்றுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பரோடா அணிக்கு எதிராக மும்பை அணிக்காக விளையாடிய போட்டிதான் ரோகித் சர்மாவுக்கு முதல் டி20 போட்டியாகும். மேலும், இதுவரை நடைபெற்ற அனைத்து டி20 உலகக் கோப்பையிலும் ஆடிய ஒரே இந்திய வீரர் ரோகித் சர்மா என்ற பெருமை அவருக்குள்ளது.

2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்ற இந்திய வீரர் என்ற பெருமையும், ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற வீரர் என்பதும் ரோகித் சர்மாவுக்கே உரியது. இதுவரை அவர் 450 டி20 போட்டிகளில் விளையாடி வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 412 போட்டிகளிலும், விராட் கோலி 401 போட்டிகளிலும், எம்.எஸ். தோனி 393 போட்டிகளிலும், சுரேஷ் ரெய்னா 336 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். தினேஷ் கார்த்திக் மற்றும் சுரேஷ் ரெய்னா ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், ரோகித் சர்மாவின் சாதனையை விராட் கோலி மட்டுமே முறியடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எம்.எஸ். தோனி தற்போது 393 போட்டிகளில் விளையாடிய நிலையில், இன்னும் 7 போட்டிகளில் விளையாடினால், அவர் 400 ஆவது போட்டியை விளையாடி சாதனை படைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், ரோகித் சர்மாவின் வரலாற்று சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.